ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

0 1861
ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் இன்று காஷ்மீர் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த 14 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்ததையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததுடன் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் பல மாதங்களாக வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு மோடி அழைத்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத் உள்பட 3 பேர் கலந்துக் கொள்கின்றனர்.

பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்க குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

பிரதமரை சந்திக்க திறந்த மனத்துடன் வந்திருப்பதாக செய்தியாளர்களிடம் கூறிய மெஹ்பூபா காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments