கொரோனா ஊடங்கால் வருமானம் இழப்பு - கடனால் உயிரைவிட்ட தம்பதி..!

0 3075
கொரோனா ஊடங்கால் வருமானம் இழப்பு - கடனால் உயிரைவிட்ட தம்பதி..!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்து கடனில் தவித்து வந்த கணவன் மனைவி , தாங்கள் குழந்தையை போல வளர்த்த நாயின் முகத்தை கண்ணாடி கவரால் இறுக்கமாக மூடிவைத்து விட்டு, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாய் உயிர் தப்பிய நிலையில் தாங்கள் பெற்ற கடனுக்காக வீட்டை எழுதிவைத்து விட்டு உயிர் நீத்த உத்தம தம்பதி

சென்னை, மந்தைவெளி சிவராமன் தெருவில் 55 வயதான லோகநாதன், 48 வயதான சாந்தி ஆகியோர், சொந்த வீட்டில் வசித்து வந்த தம்பதியர் தான்., தாங்கள் பெற்ற கடனை அடைக்க உயிரை விட்டுள்ளனர்..!

லோகனாதன் - சாந்தி தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும், குழந்தையில்லாததால்  நாய் ஒன்றை தங்களது குழந்தை போல் இருவரும் வளர்த்து வந்துள்ளனர்.

வாகன மெக்கானிக்கான லோக நாதன் பால் வியாபாரமும் செய்து வந்தாலும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா ஊரடங்கால் முறையான வருமானமின்றி தவித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் லோகநாதனின் வீடு வெகுநேரமாக பூட்டிக்கிடந்த நிலையில் அக்கம்பக்கத்து வீட்டாரின் தகவலின் பேரில் அபிராமபுரம் போலீசார் லோகனாதன் வீட்டுக்கதவை திறந்து பார்த்த போது லோகனாதனும் அவரது மனைவி சாந்தியும் வீட்டுக்குள்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவர்கள் குழந்தை போல் வளர்த்த நாயின் தலையில் காற்று புகமுடியாத அளவுக்கு கண்ணாடி பேப்பரை இருக்கமாக கட்டி வைத்திருந்தனர். அந்த நாய் தனது வாயால் கண்ணாடி பேப்பரை கடித்து குதறியதால் உயிர் தப்பியது. 

இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கால் சரியான முறையில் வேலை இல்லாததால் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் பல இடங்களில் லோகநாதன் அதிகமாக கடன் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், மாதாந்திரச் சீட்டு நடத்தி, பணம் செலுத்தியவர்களுக்கும் திருப்பி கொடுக்க முடியாமல் கடனில் சிக்கி தவித்துள்ளார்.

இந்நிலையில், லோகநாதன் தனது நண்பர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் தற்கொலைக்காண காரணங்களை விளக்கி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்தது.

பண கஷ்டத்தின் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொள்வதாகவும் இருவரையும் ஒரே குழிக்குள் வைத்து புதைத்து விடுமாறும் தங்களது வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை தான் கடன் வாங்கிய நபர்களிடம் கொடுத்து விடுமாறும் கூறி கடன் வாங்கிய நபர்களின் பட்டியலையும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஆசை ஆசையாக குழந்தைபோல் வளர்த்த நாயை விட்டுச் செல்வதற்கு மனமில்லாமல் அதன் முகத்தில் பாலிதீன் பையை இறுக்கமாக கட்டி வைத்த பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இருவரும் இறந்த நிலையில், பாலிதீன் பையை கடித்து சுவாசித்த நாய், கத்தும் சத்தம் கேட்ட பிறகே அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்துள்ளனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை மட்டும் போலீசார் காப்பாற்றி விலங்குகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

அதே நேரத்தில் இருவரும் பணகஷ்டத்தில் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது கடன் கொடுத்தவர்களின் மிரட்டலால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments