ஏடிஎம் கொள்ளை... முக்கிய கொள்ளையன் கைது..!

0 4042

எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் ஏடிஎம் எந்திரங்களை குறிவைத்து நடந்த நூதன கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஹரியானாவை சேர்ந்த முக்கிய கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்து, நான்கரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னையில் எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் எந்திரம் உள்ள ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக புகார் வந்தது. விசாரணையில் பணம் எடுப்பது போல் எந்திரத்தின் சென்சார் பகுதியை தடுத்து வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யாதவாறு கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தியாகராய நகர் துணை ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான ஹரிகிரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஹரியானா விரைந்தனர்.

இதனிடையே ஏடிஎம் மையங்களில் பதிவான சிசிடிவி காட்சியில் உள்ள அடையாளங்களை வைத்தும், செல்போன் நெட்வொர்க் மூலம் கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து ஹரியானா போலீஸ் உதவியுடன் அமீர் அர்ஸ் என்ற முக்கிய கொள்ளையனை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவனிடமிருந்து நான்கரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையில் சென்னையில் மட்டும் 14 சம்பவங்களில் 45 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு குழுக்களாக பிரிந்து கொள்ளை கும்பல் சென்னையில் கைவரிசை காட்டியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவாக உள்ள கொள்ளை கும்பல் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் முகாமிட்டு,மோசடி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சில நபர்களை பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments