தந்தையை தாக்கிய போலீசுக்கு எதிராக மகளின் போராட்டம்..! டவர் - தண்ணீர் தொட்டி மீது ஏறி மிரட்டல்

0 3618
தந்தையை தாக்கிய போலீசுக்கு எதிராக மகளின் போராட்டம்..! டவர் - தண்ணீர் தொட்டி மீது ஏறி மிரட்டல்

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் அரிசிக் கடத்தல் வழக்கில் சிக்கிய தந்தையை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறி போலீசுக்கு எதிராக அவரது மகள் மருத்துவமனை தண்ணீர்த் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்த நிலையில் கடந்த 17ம் தேதி ரேஷன் கடையில் 10 கிலோ அரிசி வாங்கி கொண்டு தனது உறவினர் வீட்டில் கொடுத்து பணம் வாங்கிவர கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த புளியரை போலீசார், பிரான்சிஸ் கொண்டு சென்ற அரிசியை பறிமுதல் செய்து, மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்துறையினர் கூறியது போல், 18ஆம் தேதி காலை பிரான்சிஸ் புளியரை காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர் மீது அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்ததோடு, விசாரணை என்ற பெயரில் உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் தனிப்படை காவலர் மஜ்ஜித், உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பிரான்சிசை சரமாரியாக தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதில் பலத்த காயம் அடைந்த பிரான்சிஸ் தற்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது இளையமகளான அபிதா என்பவர் அரசு மருத்துவமனை அருகில் இருந்த 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி மிரட்டல் விடுத்தார்

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 9.30 மணியளவில் அபிதா கீழே இறங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய அதே பெண் அபிதா செவ்வாய்கிழமை செங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தினார்.

அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்த நிலையில் தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இளம் பெண் தொடர்போராட்டம் நடத்தினார். 

இதற்கிடையே பிரான்ஸின் மூத்தமகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 2 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இளம்பெண்கள் இருவரையும் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அரிசி கடத்தியதாக வழக்கு பதிவு செய்ததால் சம்பந்தப்பட்ட போலீசாரை பழிவாங்கும் நோக்கில் அவரது மகள்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறிய காவல்துறையினர் இதனால் அரசு மருத்துவமனைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments