பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்-பெண் சிசு கொலையா? தந்தையிடம் போலீசார் விசாரணை

0 2820
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரியாமல் பெற்றோரால் தூக்கிச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 3ஆவதும் பெண்ணாகப் பிறந்ததால் குழந்தை கொலை செய்யட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சண்முகம் - தனலட்சுமி தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், கடந்த 12-ந்தேதி அவருக்கு பல்லடம் அரசு மருத்துவ மனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. தனலட்சுமிக்கு உடலில் ரத்தம் குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை திடீரென மருத்துவ பணியாளர்களுக்கு தெரியாமல் தனலட்சுமியும் கணவர் சண்முகமும் குழந்தையுடன் பல்லடத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் மூலம் பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் சென்று அவர்கள் சண்முகம் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை அங்கு இல்லை.

வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாகவும் உடலை யாருக்கும் தெரியாமல் காளிவேலம்பட்டி அருகே புதைத்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் சண்முகம். இதனையடுத்து மருத்துவக் குழுவினரால் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது.

3வதும் பெண்ணாகப் பிறந்ததால் குழந்தை கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments