நெஞ்சை உலுக்கும் நள்ளிரவு கொடூரம்: பேயை ஓட்டுவதாக நினைத்து சித்திரவதை - சிறுவன் பலி

0 5851

பேய் பிடித்துவிட்டதாக கூறி, பேயை ஓட்டும் முயற்சியில், உடல்நலம் குன்றிய சிறுவனை சித்திரவதை செய்து, நாக்கை அறுத்து, தாயும், 2 சித்திகளும் சேர்ந்து மரணத்தை ஏற்படுத்திய நெஞ்சை உலுக்கும் கொடூரம் ஆரணி அருகே அரங்கேறியுள்ளது.

மூன்று பெண்கள், ஒரு சிறுவனை கிடத்தி வாயில் தண்ணீரை ஊற்றும் இந்த காட்சி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் எடுக்கப்பட்டது.

இந்த 3 பெண்களும், சிறுவனும், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர்கள். குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் நிகழ்ந்த சில அகால மரணங்களால் பேய், பிசாசு என மூடநம்பிக்கைகளில் உழன்று வந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இதில் திலகவதி என்ற பெண்ணின் 7 வயது மகன் சபரிக்கு கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளான்.

மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காட்டுவதற்குப் பதிலாக, மூளையில் நஞ்சு போல உறைந்திருந்த மூடநம்பிக்கையால், சிறுவனுக்கு பேய் பிடித்துவிட்டதாக திலகவதியும், அவரது இரண்டு தங்கைகளும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். பேய் ஓட்டுவதற்காக ஆட்டோவில் சிறுவனையும் தூக்கிக் கொண்டு மூவரும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இருந்து வந்தவாசி சென்றுள்ளனர். மூன்று பேரும், சிறுவனை துன்புறுத்தியதைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர் வழியில் கண்ணமங்கலம் என்ற ஊரில் இறக்கிவிட்டு தப்பித்தால் போதும் என ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அருகில் இருந்த கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற 3 பெண்களும் அங்கு வைத்து சிறுவனை பேயை ஓட்டுவதாகக் கருதி இரவு முழுவதும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சிறுவனின் நெஞ்சில் பேய் இருப்பதால் அதனை விரட்ட சிறுவனின் நெஞ்சில் காலால் மிதித்தாகவும், சத்தம் போட்டதால் சிறுவனின் நாக்கை அறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவனை மீட்க முயன்றபோது, கத்தியை எடுத்து 3 பெண்களும் தாக்க வந்ததாக, சம்பவத்தை பார்த்த மூதாட்டி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல, சம்பவத்தை பார்த்த மற்றொரு நபர், போலீசாரை அழைத்து வந்தபோதுதான், மூன்று பெண்களும் சேர்ந்து சிறுவன் வாயில் தண்ணீர் ஊற்றி எழுப்ப முயன்றனர்.

ஆனால் ஏற்கெனவே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதுதான் நெஞ்சை உலுக்கும் சோகம். சிறுவனின் சடலத்தை மீட்ட பிறகு, பெண்களில் ஒருவரை தாக்கிய நபர்தான், சம்பவ இடத்திற்கு போலீசாரை அழைத்து வந்தவர் என கூறப்படுகிறது.

சிறுவனின் உடல், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிறுவனின் இறப்புக்கு காரணமான தாய் திலகவதி மற்றும் திலகவதியின் சகோதரிகளான பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments