பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு குவியும் புகார்கள்

0 3230
பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு குவியும் புகார்கள்

கைது செய்யப்பட்ட பப்ஜி யுடியூபர் மதன் மீது, இளவயதினரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பண மோசடி புகார்கள் வந்திருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆபாசப் பேச்சுடன் ஆன்லைனில் சட்டவிரோத பப்ஜி கேம்கள், அதை யுடியூபில் பதிவேற்றுதல் உள்ளிட்ட புகார்களில் மதனும், அவனுடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

இந்நிலையில் மதனின் மோசடி அவதாரம் குறித்து புதிய புகார்கள் வந்துள்ளன. யூ டியூப் சேனல்கள் மூலமாக வரும் வருவாயை, ஏழை குழந்தைகள், ஆதரவற்றோருக்கு  செலவிடுவதாகக் கூறி போலியான வீடியோக்களை மதன் பரப்பியுள்ளான். அந்த பொய்யை மூலதனமாக்கி, தன்னை பின்தொடரும் இளம்வயதினரிடம் இருந்து, சிறிது சிறிதாக லட்சக்கணக்கில் மதன் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து புகார்களுக்கான மின்னஞ்சல் முகவரிக்கு  நூற்றுக்கும் மேற்பட்ட பண மோசடி புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்தாரர்களில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளம் வயதினர் அதிகமாக இருப்பதாகவும், ஆன்லைனில் வரும் புகார்கள் அரைகுறையாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெற்றோர்கள் மூலம் ஆன்லைனில் முழுமையான புகாராக அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.

மதன் வங்கி கணக்கிற்கு அல்லது ஜிபே போன்ற மின்னணு பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பியதற்கான ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மதன் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்ட பணத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments