லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வேட்டை... 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

0 7697

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சீருடை இல்லாமல் லாரிகளிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர், அவரை வீடியோ எடுத்த லாரி கிளீனரை அடித்து உதைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் உட்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் செல்வமணியும் அவருடன் பணியாற்றும் காவலர்களும் காமலாபுரம் விமான நிலையம் அருகே வாகன தணிக்கை நடத்துவது வழக்கம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் செல்வமணி அவரது சொந்த காரை எடுத்து வந்து காமலாபுரம் விமான நிலையம் அருகே நிறுத்திக்கொண்டு, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மூலம் சாதாரண உடையில் லாரிகளை நிறுத்தி மாமூல் வசூலித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வழியாக கேரளாவைச் சேர்ந்த லாரி ஒன்று வந்துள்ளது. லாரி ஓட்டுநரிடம் காவலர்கள் பணம் கேட்கவே, தன்னிடம் அனைத்து ஆவணங்களும் முறையாக இருப்பதால் பணம் தர மாட்டேன் என மறுத்துள்ளார் ஓட்டுநர். அதனால் காவலர்கள் அவரை மிரட்டத் தொடங்கியுள்ளனர். இதனை லாரி கிளீனரான விஷ்ணு என்ற இளைஞர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆய்வாளர் செல்வமணி, கிளீனர் இளைஞனை தனது காருக்கு அழைத்துச் சென்று தாக்கி அவரது செல்போனைப் பிடுங்கினார் என்று கூறப்படுகிறது.

விஷயம் கேரளாவிலுள்ள லாரி உரிமையாளருக்குச் செல்லவே, அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்க உள்ளதாக கூறியுள்ளார். அதிர்ந்துபோன போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் செல்வமணி, லாரி உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து லாரி கிளீனர் எடுத்த வீடியோ, லாரி உரிமையாளர் பேசிய ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில் காவல் ஆய்வாளர் செல்வமணியும் அவருடன் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான மற்றொரு செல்வமணி, தலைமை காவலர்கள் ராஜா, செல்வம் ஆகியோர் மாமூல் வசூலித்தது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் உயிரையும் குடும்பத்தினரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான போலீசாரின் அர்ப்பணிப்பு உணர்வையும் தியாகத்தையும் இதுபோன்ற ஒரு சில போலீசாரின் செயல்கள் இருட்டடிப்பு செய்துவிடுகின்றன என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வமணியையும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான மற்றொரு செல்வமணியையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் துறை டிஐஜி மகேஸ்வரி  உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments