உலக தந்தையர் தினம்..!

0 2651
உலக தந்தையர் தினம்..!

லகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் கர்நாடகாவில் ஆன்லைன் மூலம் படிக்கும் மகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நடுச்சாலையில் அவரது தந்தை கால்கடுக்க குடைபிடித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாயின் அன்பு வெளிப்படையாக தெரிந்துவிடும் நிலையில், பிள்ளைகள் மீதான பேரன்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் கரடுமுரடாகத் திரியும் தந்தையர்களின் அன்பு வெளியில் தெரியாது. குறிப்பாக பெரும்பாலான இந்திய தந்தையர்கள் பிள்ளைகளுக்காக தங்களது தனிப்பட்ட ஆசைகள், விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, அரிதாரம் பூசாத முகத்தில் ஆசைகளை மறைத்துக் கொண்டு வாழும் கடவுள்கள் என்றே சொல்லலாம்....

வாழும் இடம் பெயர்ந்து, கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் எல்லோரையும் பிரிந்து வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ ஆண்டுக்கணக்கில் வேலை செய்து ஓடாய் தேயும் தந்தையர்கள் உலகம் முழுக்கவே உண்டு. இளம் பிராயத்தில் தன்னால் பெற முடியாமல் போன கல்வி, மருத்துவம், வசதி, வாய்ப்புகளை தனது பிள்ளைகளாவது பெற வேண்டும் என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும்.

"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்" என்ற வள்ளுவனின் வரிகளுக்கு ஏற்ப, கற்றவர் கூட்டத்தில் தங்களது மகனையோ, மகளையோ முந்தி இருக்கச் செய்ய வேண்டும் என நினைக்கும் தகப்பன் சாமிகள் ஏராளம். அப்படி ஒரு தந்தை கர்நாடகாவில் ஆன்லைன் மூலம் படிக்கும் தன் மகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நடுச்சாலையில் கால்கடுக்க குடைபிடித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவி, செல்போன் சிக்னலுக்காக மரங்கள் அடர்ந்த சாலையில் அமர்ந்து ஆன்லைனில் படிக்கிறார். அப்போது மழை கொட்டத் தொடங்கி இருக்கிறது. அதனைக் கண்ட அந்த மாணவியின் தந்தை குடை ஒன்றை எடுத்து வந்து மகளின் படிப்பு கெடா வண்ணமும், மழையில் நனையாமலும் லாவகமாக பிடித்தபடி நீண்ட நேரம் நின்றிருக்கிறார்.

தந்தையின் தியாகத்தை சிந்தையில் வைத்து, நிந்தனை செய்யாமல் அவர்களின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள் உரித்தாகுக....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments