நடிகையின் பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

0 6517
நடிகையின் பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக நடிகை அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற பிரிவை நீக்குமாறு பரிந்துரைத்த நீதிபதி, அவரை ஜூலை 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும் 3 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் மணிகண்டன் திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணிகண்டன் கடந்த வாரம் வரை திருநெல்வேலியில் இருந்ததை உறுதி செய்தனர். பின்னர், மணிகண்டனின் நெருக்கமான நண்பர் ஒருவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார், அனேகல் பகுதியில் இருந்த பண்ணை வீட்டில் மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் மணிகண்டன் முதலில் திருநெல்வேலிக்கு தப்பி சென்றதும், பின்னர் அங்குள்ள நண்பர் உதவியுடன் பெங்களூருவில் உள்ள நண்பர் சீனிவாசனை தொடர்பு கொண்டு அங்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

பெருங்களூருவில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட மணிகண்டனிடம் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிகண்டனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டனும், நடிகையும் விருப்பத்துடனே பழகியுள்ளதால், அது பாலியல் வன்கொடுமை ஆகாது எனவும், எனவே, மணிகண்டன் வழக்கில் வேறு சட்டப்பிரிவை பயன்படுத்த போலீசாருக்கு பரிந்துரைத்தார்.

மேலும், ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments