மூச்சை நிறுத்திக் கொண்ட சீக்கியப் பறவை..!

0 4920

"றக்கும் சீக்கியர்" என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்தியத் தடகள வீரர் மில்கா சிங் காலமானார். அவருக்கு வயது 91. பல்வேறு நாடுகளில், ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பல கனவுகளோடு ஓடிய அவரது கால்கள் தனது இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டன.

நாடு சுதந்திரம் பெற்ற பின் தடகளப் போட்டி வாயிலாக முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் மில்கா சிங். இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்த மில்கா சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை கலவரத்தின்போது, பெற்றோரையும் உடன் பிறந்த சகோதரர்களையும் பறிகொடுத்தவர். உயிரைப் பிடித்துக் கொண்டு டில்லிக்கு ஓடிவந்தவருக்கு அவருடைய மற்றொரு சகோதரர் அடைக்கலம் கொடுத்து ராணுவத்திலும் சேர்த்து விட்டர்.

ராணுவத்தில் மிகக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தயமொன்றில் ஜெயித்தபோது தன்னிடம் இருக்கும் திறமையை உணர்ந்தார் மில்கா சிங். அதன் பிறகுதான் தடகளப் போட்டி அவரை ஆரத்தழுவிக்கொண்டது.

1958ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார் மில்கா சிங். 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டார். இருப்பினும் அந்தப் போட்டி அவருக்கு சர்வதேச அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது.

1962ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைரகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார். காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் நிரந்தர சாம்பியனாகத் திகழந்தார்.

எந்த பாகிஸ்தானில் இருந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்தாரோ, அதே பாகிஸ்தான் மண்ணில் 1960ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வென்றுதான் "பறக்கும் சீக்கியர்" என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர் ஆனார் மில்கா சிங்.

இந்தியாவின் தனித்துவ அடையாளமாகத் திகழ்ந்த மில்கா சிங்கும் அவரது மனைவி நிர்மல் கவுரும் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அவரது மனைவி சில தினங்களுக்கு முன் இறந்துவிட, கொரோனா குணமான பின்பும் மனைவி இறந்த சோகத்தில் வேறு சில உடலநல பாதிப்புகளுக்கு உள்ளானார் மில்கா சிங். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மில்கா சிங்கின் உயிரும் பிரிந்தது.

தடகளப் போட்டியில் தடம் பதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மில்கா சிங் நிச்சயம் ஒரு முன் மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments