தமிழ்நாட்டில் தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 5517
தமிழ்நாட்டில் தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திங்கட்கிழமை முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்குவது, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது உள்ளிட்டவை தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது மூன்று வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கடந்த 14ம் தேதி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதியளிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு கடைகளை மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

பாதிப்பு அதிகமாக உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அமலில் உள்ள இந்த ஊரடங்கு வரும் 21ம்தேதி காலையில் முடிவடைகிறது.

ஊரடங்கை மேலும் நீட்டித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜவுளி, ஆயத்த ஆடை கடைகளுக்கு அனுமதி, சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, கடைகளுக்கான நேரத்தை அதிகரிப்பது போன்ற தளர்வுகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொதுமுடக்கத்தால் முடங்கியுள்ள அரசு போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மீண்டும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடத்துனர்கள், பேருந்து ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.இதுவரை 19 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்து அனுமதி என்பது பலவகை நடைமுறை சிரமங்களுடையது என்பதால் முழு அளவில் மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments