டம்மி பாபாவுக்கு சாமரம் வீசிய ‘சுளுக்கு’ ஸ்மிதா..! ரகசிய அறையும் கண்டுபிடிப்பு

0 9777
டம்மி பாபாவுக்கு சாமரம் வீசிய ‘சுளுக்கு’ ஸ்மிதா..! ரகசிய அறையும் கண்டுபிடிப்பு

பள்ளிக்குழந்தைகளை மூளைச் சலவை செய்து டம்மி பாபா சிவசங்கரனின் பாலியல் இச்சைக்கு அனுப்பிவைத்த புகாருக்குள்ளான பக்தை சுஷ்மிதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்தி வந்த சாமியார் சிவசங்கர் பாபா, அந்த பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டம்மி பாபா சிவசங்கர் மீது இதுவரை இரண்டு முன்னாள் மாணவர் உட்பட மூன்று மாணவிகள் கொடுத்த புகார்களில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த புகாரில், சிவசங்கர் ஆசிரமத்தில் பணிபுரியும் அவருடைய பெண் பக்தர்கள் சிலரும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் சிவசங்கரனின் பாலியல் இச்சைக்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கரின் பெண் பக்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவசங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெண் பக்தர்கள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் கருணா, நீரஜ் என்ற இரண்டு பெண் ஆசிரியைகளும், சுஸ்மிதா என்ற பள்ளியின் முன்னாள் மாணவியிடமும் கிடுக்கிப்பிடி கேள்விகளால் சுளுக்கெடுத்தனர்.

இதில் சிவசங்கருக்காக பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையே சீரழிக்க முக்கிய காரணமாக இருந்தது சிவசங்கரின் நீண்ட கால பக்தையான சுஷ்மிதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்ததையடுத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே சுஷில் ஹரி பள்ளியில் படித்த சுஷ்மிதா படிப்பு முடிந்த பின்பும் டம்மி பாபாவின் லீலைகளால் ஈர்க்கப்பட்டு பக்தையாக மாறி அங்கேயே வீடு எடுத்து அவரது ஆதரவுடன் வசித்து வந்துள்ளார்.

சிவசங்கருக்கு பக்தையாக பணிவிடை செய்வதும், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மூளைச்சலவை செய்து பாபாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட சுஷ்மிதாவிற்கு ஆறு மாத குழந்தை ஒன்றும் உள்ளது.

அவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். தொடர்ந்து விசாரணை வளையத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்கள், அந்த பள்ளியின் ஆசிரியைகள் மேலும் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே ஆசிரமத்தில் சிவசங்கர் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

முழுவதும் கருப்பு கண்ணாடி மற்றும் திரை சீலைகளால் மூடி மறைக்கப்பட்டிருந்த அந்த பங்களாவில் சிவசங்கர் பயன்படுத்திய படுக்கை அறை மற்றும் மாணவிகளை சந்தித்த ரகசிய அறைகளை ஆய்வு செய்தனர்.

அந்த அறைகளுக்கு டம்மி பாபாவை அழைத்துச்சென்று விசாரணை நடத்தும் திட்டத்தில் காவல்துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறியதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டம்மி பாபாவுக்கு சாமரம் வீசிய சுஷ்மிதாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments