மதனுக்கு மாவுக்கட்டு போட வாய்ப்பிருக்கா..? ஒர்த் இல்லைன்னு கதறல்..! விருதை திருப்பி வாங்கிய கருப்பு ஆடு..!

0 39777
மதனுக்கு மாவுக்கட்டு போட வாய்ப்பிருக்கா..? ஒர்த் இல்லைன்னு கதறல்..! விருதை திருப்பி வாங்கிய கருப்பு ஆடு..!

சிறுவர் மற்றும் பெண்களுடன் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாடி அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ததோடு, லட்சக்கணக்கில் நன்கொடை பெற்று மோசடி செய்த ஆபாச யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டு  சென்னைக்கு அழைத்துவரப்பட்ட  நிலையில், தன்னை படம் பிடித்தவர்களிடம், நான் என்ன பிரதமரா? படம் எடுப்பதற்கு என்று கேள்வி எழுப்ப, நீ குற்றவாளி தான் பேசாமல் வா என்று காவல்துறையினர் இழுத்துச்சென்றனர். மதனுக்கு மாவுக்கட்டு  மிஸ்ஸான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

இனிமேல் தனது ஆட்டம் ரொம்ப உக்கிரமாக இருக்கும் என்றும் தான் ஒரு போராளி என்றும் மெத்தபடித்த மேதாவி போல காவல்துறைக்கே சவால் விட்ட ஆபாச யூடியூப்பர் மதனை தங்கி இருந்த ஓட்டலுக்குள் புகுந்து தனிப்படை போலீசார் தட்டி தூக்கியுள்ளனர்..!

சேலத்தை பூர்வீகமாக கொண்ட மென்பொறியாளரான மதன் வேங்கை வாசலில் தங்கி இருந்து, தனது காதல் மனைவி கிருத்திகாவின் ஐடியாபடி, குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனது முகத்தை காட்டமலேயே ஆபாச பேச்சுடன் பப்ஜி விளையாடி யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து பாலுணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசி யூடியூப்பில் கேமிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளான்...

மதனின் ரசிகர்கள் என்றும், மதனின் தம்பிகள் என்றும், கமெண்டில் சில்லரையை சிதறவிட்டவர்களிடம், ஏழைகளின் படிப்பிற்காக, மருத்துவத்திற்காக என்று லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து, தனக்கு தெரிந்த சிலருக்கு சொற்ப தொகையை கொடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளான். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ ஒருவரின் மகன் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதனிடம் பறிகொடுத்ததாக கூறப்படுகின்றது...

யூடியூப் புரொபைல் டிபி-யிலும், இன்ஸ்டாகிராமிலும் சிறு வயது படத்தை போட்டோஷாப் செய்து வைத்துக் கொண்டு, இளம் பெண்களையும் சிறுமிகளையும் கவர்ந்து ஆபாச சாட்டிங்கில் மூழ்கிய மதன், நிஜத்தில் உடல் பெருத்து காணப்பட்டான்.

மதன், தான் ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்று சர்வரில் செட் செய்து வைத்துக் கொண்டு, தலைமறைவான நிலையில், அவனுக்கு தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தை முகவரியுடன் போட்டுக் கொடுத்தவர் அவனது தந்தை மாணிக்கம்..! அதன் தொடர்ச்சியாக தருமபுரியில் ஓட்டலில் சொகுசு அறையில் ஒளிந்திருந்த மதனை கொத்தாக தூக்கி சென்னை கொண்டு வந்தனர் போலீசார்..!

சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவனை காவல் துறையினர் பிடித்துக் கொள்ள பல்வேறு மீடியாக்கள் மதனை சுற்றி படம் பிடித்தனர். உடனே அவர்களிடம் நான் என்ன பி.எம்-ஆ.... இப்படி படம் எடுக்கறீங்க..? என்று மதன் குரலை உயர்த்த, இல்ல தம்பி நீ அக்கியூஸ்ட்டு தான் மூடிகிட்டு வான்னு காவல் ஆய்வாளர் இழுத்துச்சென்றார்...

காவல்துறையினர் ரவுடிகளை கைது செய்ய சென்றால் அவர்கள் போலீசிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தாவிக்குதித்து தப்பி ஓடுவதால், தவறி விழுந்தோ, அல்லது கழிவறையில் வழுக்கி விழுந்தோ கை மற்றும் கால்களை முறித்துக் கொள்வதும்... அவர்களை மீட்டு போலீசார் மனிதாபிமானத்தோடு மாவுக்கட்டு போடுவதும் வழக்கம்..! ஆனால் பப்ஜி மதன் போலீசாரை கண்டதும் கப்பென்று காலில் விழுந்து, நீங்க தேடுற அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லை சார், தெரியாமல் கெட்டவார்த்தை பேசிட்டேன்னு கதறியுள்ளான். அதனால் அவனுக்கு மாவுக்கட்டு மிஸ்ஸானதாக கூறப்படுகின்றது..!

அதேநேரத்தில் ஆபாச யூடியூப்பர் மதனுக்கு வழங்கப்பட்ட ப்ளாக்சிப் விருதை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், விருது வழங்கும் போது மதன் இப்படி எல்லாம் பேசியது தங்களுக்கு தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ள துணை நடிகர் விக்னேஷ் காந்த், மதனுக்கு விருது வழங்கியதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

காதல் மனைவி கிருத்திகா கைது, 2 கொகுசுகார்கள் பறிமுதல், 8 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட 2 யூடியூப் சேனல்கள் முடக்கம், 4 கோடி ரூபாய் பணம் இருந்த வங்கி கணக்குகள் முடக்கம் என்று சென்னை பெரு நகர போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஆபாச யூடியூப்பர் மதன் ஆப்பசைத்த யூடியூப்பராகி ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments