சிறுவர் சிறுமியரிடம் ஆபாச பேச்சு - தலைமறைவாக இருந்த டாக்சிக் மதன் கைது

0 6043
போலீசாருக்கு சவால் விடுத்து தலைமறைவாக இருந்து வந்த யூட்யூபர் மதனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தருமபுரியில் வைத்து கைது செய்தனர்.

போலீசாருக்கு சவால் விடுத்து தலைமறைவாக இருந்து வந்த யூட்யூபர் மதனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தருமபுரியில் வைத்து கைது செய்தனர்.  

இண்டர்நெட்டின் இருண்ட பக்கங்களில் மறைந்து கொண்டு, தடை செய்யப்பட்ட "பப்ஜி"  ஆன்லைன் விளையாட்டில் விடலைகளை  ஈடுபடுத்துதல், ஆபாசமாக பேசி அதை யுடியூபில் ஏற்றி லட்சக் கணக்கில் காசு பார்ப்பது என இளைய சமூகத்திடம் நஞ்சை விதைத்து கொண்டிருந்தவன், டாக்சிக் மதன்.

அடுத்தடுத்து அடுக்கடுக்காக குவிந்த புகார்களின் அடிப்படையில், மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, சிறார்களிடம் ஆபாசமாக  பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக போக்சோ சட்டப்பிரிவுகளை சேர்க்க போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதேசமயம் போலீசாருக்கு தப்பி தலைமறைவான மதனின் ஆடியோவை பதிவேற்றி வந்த அவனது மனைவி கிருத்திகாவை சேலத்தில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து மதனின் தந்தையிடமும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தருமபுரியில் மதன் தலைமறைவாக இருந்த தகவலறிந்து அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர்.

விலை உயர்ந்த காரில் சுற்றிக் கொண்டிருந்த மதன், ஊரடங்கு காரணமாக வெளி மாநிலம் தப்பிச் செல்ல முடியாமல் நண்பர்களின் வீடுகளில் மாறிமாறி தங்கி வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மதனை சென்னை கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதனிடையே மதனின் இரண்டு கார்கள், 3 லேப்டாப்கள், ஒரு ட்ரோனையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இதனிடையே, மதன் கைது செய்யபட்டதால் அவனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மதன் இன்று காலை தருமபுரியில் கைது செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், 4 கோடி ரூபாயுடன் மதன் வங்கி கணக்கு ஒன்றையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். யுடியூப் மற்றும் மோசடிகள் மூலம் ஈட்டிய பணத்தை பங்குச்சந்தை மற்றும் பிட்காயினில் மதன் முதலீடு செய்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். மதன் தொடர்பான வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், மதனின் வங்கிக் கணக்கையும் அதில் இருந்த 4 கோடி ரூபாயையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

இந்நிலையில், தருமபுரியில் மதன் பதுங்கியிருந்த இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி அருகே குண்டல்பட்டியில் கனிஷ் என்ற தனியார் தங்கும் விடுதி உள்ளது. அங்கு, பார்திபன் என்ற பெயரில் நேற்று அறையை பதிவு செய்து, மதன் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்தே, இன்று காலை 9.45 மணிக்கு பப்ஜி மதனை விடுதி அறையில் வைத்து கைது செய்து போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments