சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம்

0 4715
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பீட்டு முறை எப்படி மேற்கொள்ளப்படும் என்பதை உச்சநீதிமன்றத்தில் மத்திய உயர்நிலை பள்ளிக் கல்வி வாரியம் விளக்கமாகத் தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே மாணவர்களுக்கான மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை தீர்மானிப்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது. வல்லுநர் குழு வகுத்துள்ள மதிப்பெண் ஃபார்முலா மற்றும் பின்பற்றப்படும் முறையை, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களில் தலா 30 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதமும் எடுத்துக் கொள்ளப்படும். 10 மற்றும் 11ஆம் வகுப்பை பொறுத்தவரை, பருவத் தேர்வு எழுதிய 5 பாடங்களில், அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பிளஸ் 2 வகுப்பில், யூனிட் தேர்வு, பருவத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ரிசல்ட் கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டி 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும். இவற்றை சரிபார்ப்பதற்காக தனிக்கமிட்டி அமைக்கப்படும். ஜூலை 31ஆம் தேதிக்குள், சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இந்த மதிப்பீட்டு முறையை ஏற்காதவர்கள், கொரோனா குறைந்த பிறகு தேர்வுகள் எழுதிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments