பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2472

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார்.

டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிட்டபின், மீண்டும் அவர் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.

தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் அலுவலகத்திற்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்க உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments