இறுகும் போலீஸ் பிடி.. ”பப்ஜி” மதனை பிடிக்க தீவிரம்; மதனின் மனைவி, தந்தையிடம் விசாரணை..!

0 3232

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள யூடியூப்பர் மதனை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சைபர் கிரைம் போலீசார், அவரது மனைவி மற்றும் தந்தையை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்த மதன், ஆன்லைனில் விளையாடும் போது சிறுவர்கள், பெண்களை ஆபாசமாகப் பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட புகாரில் சிக்கியவர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மதன் மீது 160 புகார்கள் குவிந்ததை அடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டதோடு, பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு ஆஜாராகாமல் தலைமறைவாகியுள்ள மதன், காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் பேசிய ஆடியோவும் வெளியானது.

மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் விசாரித்ததில் மதன் அங்கிருந்து தப்பிவிட்டது தெரியவந்தது. VPN எனப்படும் IP முகவரிகள் மூலம் இருப்பிடத்தை கண்டறிய இயலாத VIRTUAL PRIVATE NETWORK-ஐ மதன் பயன்படுத்தி வருவதால், அவரின் இருப்பிடத்தை கண்டறிய இயலவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மதனை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி, தந்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மதனின் தந்தை, அவரது மனைவியை சைபர் கிரைம் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவிலுள்ள நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகத்தின் உதவியுடன், மதனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments