டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா.. சுற்றி வளைத்த சிபிசிஐடி போலீசார்..!

0 4376
பாலியல் புகாரில் சாமியார் சிவசங்கர் பாபா கைது என தகவல்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, டேராடூனில் இருந்து தப்பியோடி டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் என்ற உண்டு, உறைவிட பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக் கொண்டு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிபிசிஐடி தனிப்படை குழு, டேராடூன் விரைந்தது. இதனை அறிந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், நேபாளம் நாட்டிற்கு சென்றுவிட்டாரா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, டெல்லி போலீஸ் உதவியை நாடினர். இந்த நிலையில் தெற்கு டெல்லியின் சாக்கெட் ((saket)) என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் மடக்கி பிடித்தனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சாக்கெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள போலீசார், நீதிமன்ற ஆணை பெற்று அங்கிருந்து சென்னை அழைத்து வருகின்றனர்.

சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே 2 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் மேலும் சில ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள சிபிசிஐடி போலீசார் குழு அங்கு 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து 4 லேப்டாப்புகள் மற்றும் 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ளனர். மேலும், சிவசங்கர் பாபாவுக்கு உதவியாளராக பணிபுரிந்த ஜானகி சீனிவாசன் என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பாபாவின் பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான பாரதியின் மாமியாரான ஜானகி சீனிவாசன், தனது 7 வயதில் இருந்து அந்த ஆசிரமத்தில் வசித்து வந்துள்ளார்.

மாணவிகளை தவறாக பாதைக்கு கொண்டு செல்வதற்கு மூளைச் சலவை செய்வதில் முக்கிய நபராக அவர் விளங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments