கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 2336

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான சான்றிதழ்களைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாயும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாயும் அவர்களின் பெயரில் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டு 18 வயது நிறைவடைந்தபின் வட்டியுடன் அந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாயும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 3 லட்ச ரூபாய் வைப்புநிதியாகச் செலுத்தி அதற்கான சான்றிதழ்களைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பெற்றோரை இழந்து உறவினர், பாதுகாவலரால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் 79 பேரும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 2650 பேரும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments