முன்னாள் கல்வி அதிகாரியிடம் ரூ 10 லட்சம் வைப்பு நிதியை அபேஸ் செய்த ஓ.டி.பி மோசடி கும்பல்..! தூக்கம் கலைக்குமா எஸ்.பி.ஐ ?

0 3112

சேலம் மேட்டூர் அருகே முன்னாள் கல்வி அதிகாரியின் வைப்பு கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாயை சேமிப்பு கணக்கிற்கு மாற்றி அரைமணி நேரத்தில் மொத்தபணத்தையும் அபேஸ் செய்த ஓ.டி.பி மோசடி கும்பல் குறித்து சேலம் சைபர் கிரைம் காவல்துறையிலும்,  மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணத்தை முடக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாத எஸ்.பி.ஐ வங்கியின் அலட்சியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை வெளி நபரிடம் சொல்லக்கூடாது என்றும், வங்கிகள் ஒருபோதும் ஓடிபியை கேட்பதில்லை என்றும், எத்தனை விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வெளியிட்டாலும் சூழ்நிலையை பயன்படுத்தி இதுபோன்று நடக்கின்ற மோசடிகள் தொடரவே செய்கின்றன.

சேலம் மேட்டூர் அணை கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள்., ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் ஆவர். இவரது கணவர் அன்பழகன் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் இரும்பாலை கொரோனா சிகிச்சைமையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கவலையுடன் வீட்டில் இருந்துள்ளார் செல்லம்மாள்... இந்த நிலையில் வீட்டு லேண்ட் லைன் போனுக்கு அழைத்த மர்ம ஆசாமி ஒருவன், தான் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு புதிய வங்கி புத்தகம் மற்றும் ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை தயார் செய்து வைத்து இருப்பதாகவும், அதனை சிஸ்டத்தில் ஆக்டிவேட் செய்ய தங்களது செல்போன் நம்பருக்கு ஓ.டி.பி நம்பர் ஒன்று வந்திருக்கும் அதனை கூறுங்கள் என்று கூறியுள்ளான்.

மனக்குழப்பத்தில் இருந்த செல்லம்மாளும் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என நினைத்து ஓடிபி நம்பரை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வைப்பு நிதியில் இருந்த 10 லட்சம் ரூபாயும், சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து 42 ஆயிரத்து 300 ரூபாயும் என மொத்தமாக ஆன் லைன் மூலமாக வேறொருவர் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுவிட்டதாக செல்போனுக்கு தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து, அரசு மருத்துவரான தனது மகன் ராஜராஜனுடன், SBI கிளைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார் செல்லம்மாள்... அங்குள்ள ஊழியரோ உங்கள் பணாம் இனி கிடைக்காது என்றும் போலீசில் சென்று புகார் அளிக்கும்படியும் கூறியுள்ளார்...

அங்கிருந்த வங்கி கிளை மேலாளர் மற்ற ஊழியர்களோ பணத்தை எடுப்பதற்கு ஓ.டி.பி நம்பர் மூலம் அனுமதி கொடுத்தது நீங்கள் தான் என்றும், தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கூறி புகாரை வாங்க மறுத்து விட்டதோடு, டோல் ப்ரீ நம்பரை தொடர்பு கொண்டு ஏ.டி.எம் கார்டை லாக் செய்யுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, சேலம் சைபர்கிரைம் காவல்துறையில் புகார் செய்த கையோடு, எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமை மேலாளரிடம் சென்று புகார் அளித்து தனது பிக்ஸடு டெபாஸிட் வைப்பு தொகையான 10 லட்சம் ரூபாயை தனது அனுமதியோ , அடையாளமோ இன்றி எப்படி சேமிப்புக் கணக்கிற்கு மாற்ற இயலும் என்று கேட்டு தனது பணத்தை திரும்ப தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவரோ, வங்கிகணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு பதிலாக தங்களின் ஓ.டி.பி அனுமதியுடன் புதிதாக ஒரு செல்போன் நம்பரை பதிவேற்றம் செய்து, அதனை அடையாளமாக வைத்து உங்கள் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் மோசடி கும்பல் எடுத்துள்ளது என்று விளக்கி உள்ளார் . மேலும் செல்லம்மாளின் வங்கி கணக்கில் இருந்து எந்தெந்த வங்கி கணக்கிற்கு பணம் கைமாற்றப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார். மண்டல மேலாளரை அணுகி தீர்வுகாணுமாறு அறிவுறுத்தி அனுப்பியதாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார் செல்லம்மாள். நடந்த சம்பவம் குறித்து செல்லம்மாளின் மகன் ராஜராஜன் விரிவாக விளக்கினார்

வாடிக்கையாளர் வங்கிக்கு வராமல், வருங்கால வைப்பு நிதி பணத்தை சேமிப்பு கணக்கிற்கு மாற்றும் வசதிக்காக ஓ.டி.பி சிஸ்டத்தை சில வங்கிகள் கொண்டு வந்திருப்பதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், அதனை பயன்படுத்தி மோசடி ஆசாமிகள் எளிதாக பணத்தை எடுத்திருக்கலாம் என்கின்றனர். அதே நேரத்தில் வாடிக்கையாளரின் பணத்தை மற்றோரு வங்கி கணக்கு மூலம் களவாடும் களவானிகளை உடனடியாக முடக்கி பணத்தை மீட்டுக் கொடுக்காமல், ஒவ்வொரு அதிகாரியாக பார்க்கச்சொல்லி அலைக்கழிப்பது வங்கிகளின் சரியான நடவடிக்கையா? என்பதே இதுபோன்று ஓ.டி.பி நம்பரை சொல்லி பணத்தை பறிகொடுத்து தவிக்கும் வங்கி வாடிக்கையாளர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments