ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..!

0 2941

கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, ரேசன் கடைகளில் விநியோகிக்கும் பணி தொடங்கியது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.  இதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் கடந்த 11ந் தேதி முதல் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் விநியோகம் ரேசன் கடைகளில் காலையில் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 200 பேர் வரை நிவாரணப் பொருட்களை வாங்கும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் ஒரே இடத்தில் 3 அங்காடிகள் இருந்ததால், நீண்ட வரிசையில் நின்றிருந்த பயனாளிகள் முண்டியடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  3 லட்சத்து 66 ஆயிரம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொரோனோ சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. 

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 354 ரேசன் கடைகள் மூலம், 8 லட்சத்து 72 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு, கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கப்படுகிறது. 

திருவள்ளூரில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து நிவாரண உதவிகளை பெற்றுச் சென்றனர்.

இந்த நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களை இந்த மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். வெளியூர் சென்று இருந்தவர்கள் வீடு திரும்பிய பிறகு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அவசரப்பட தேவையில்லை. நெரிசல் இல்லாமல் பொறுமையாக வாங்கி செல்லுமாறு பொது விநியோக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த மளிகைப் பொருட்களை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments