வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

0 33616

பப்ஜி யூ ட்யூபர் மதனை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் சென்ற நிலையில், அங்கிருந்து அவன் தப்பி விட்டதால், சைபர் கிரைம் ஆய்வகம் மூலம் மதன் இருப்பிடம் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், தான் கைது செய்யப்பட்டால், வெளியே வந்த பிறகு, ஆட்டம் பயங்கரமாக இருக்கும் என ரசிகையுடன் மதன் பேசும் புதிய ஆடியோ வைரலாகி வருகிறது.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் நெட்ஒர்க் சேவை மூலம் பயன்படுத்தும் மதன் மீது போக்சோ புகார்கள் குவிந்தன. ஆபாசமாக பேசி சிறுவர், சிறுமியரை விளையாட்டில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலும் புளியந்தோப்பு மாவட்ட சைபர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மதனின் சொந்த ஊர் சேலம் என தெரிவித்துள்ள போலீசார் அங்கு தனிப்படை அமைத்து தேடியதாகவும், அங்கிருந்து மதன் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விபிஎன் எனும் பிரைவட் நெட்வொர்க்கை மதன் பயன்படுத்துவதால் ஐபி முகவரியை வைத்து மதனை பின் தொடர முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனது ரசிகர் பட்டாளத்துடன் மதன் உரையாடும் ஆடியோ யுடியூபில் வெளியாகியுள்ளது. அதில் தன்னுடைய போட்டோ என்று போலீசார் வெளியிடுவதை கிண்டலடித்து சிரிக்கும் மதன், இதையெல்லாம் குஜாலாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறான்.

ஒருவேளை தான் கைது செய்யப்பட்டால், வெளிவந்த பிறகு தன்னுடைய ஆட்டம் மூர்க்கமாக இருக்கும் என்றும் மதன் கூறுகிறான்.

இதனிடையே, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் மதன் மீது வேறொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் பிரிவில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில் நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதனை கண்டுபிடிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் படி, மதனை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவாக பிரிந்து சைபர் ஆய்வகத்திலும், வெளியூரிலும் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments