முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக 17ந் தேதி பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

0 2840

முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதன்முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின், நாளை மறு நாள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். 

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் அலுவலகம் தரப்பில் நாள் மற்றும் நேரம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில், நாளை மறு நாள் காலை பத்தரை மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்தல், கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்டவை கோரிக்கை மனுவின் முக்கிய அம்சங்கள் என கூறப்படுகின்றன. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்தும் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தயுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ். டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழகத்துக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலை, நீர்வளம், மின்சாரம், தொழில்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்தும் முதலமைச்சர் பிரதமரிடம் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லி செல்லும் முதலமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 17-ந் தேதி இரவு அல்லது 18-ந் தேதி காலை டெல்லியில் இருந்து முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments