தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு... தீபாராதானை காட்டி, தேங்காய் உடைத்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்..!

0 4899

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கடை திறப்பதற்கு முன்னரே, வரிசையில் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

கொரோனா பரவல் வேகமெடுத்ததால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த 10ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வரும் அரசு,  மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டிருப்பதால், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே மது வாங்க பெரும் ஆர்வம் காணப்பட்டது.

முகக் கவசம், தனி நபர் இடைவெளியை பின்பற்றி மது வாங்கிச் சென்றனர். மதுக் கடைகள் முன்பு, கம்புகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைத்து, தனி நபர் இடைவெளிக்கான வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.   பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். 

மதுரை செல்லூரில் வெள்ளே வேட்டி-சட்டை அணிந்து, முதல் ஆளாக மது வாங்கிட நின்ற நபர், கடைக்கு தீபாராதானை காட்டி சரக்கு வாங்கினார். முதல் ஆளாக மது வாங்கிய வெற்றிக் களிப்பில், பாட்டில்களை தொட்டு வணங்கினார்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அகஸ்தீஸ்வரத்தில் மதுபாட்டில்களை வாங்கிய 2 இளைஞர்கள் புகைபோட்டு பயபக்தியுடன் எடுத்துச் சென்றனர்.

திண்டுக்கல்லில் 35 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், தேங்காய் மீது சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, சிதறு தேங்காய் போட்ட பிறகு, வியாபாரம் தொடங்கியது.

 தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் கரம்பக்குடி, குளத்தூர், நாயக்கர் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தனிமனித இடைவெளி பற்றி கவலையின்றி வரிசையில் காத்திருந்தனர்.

அதேசமயம், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்கப்படாது என போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 121 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த நபர், மது அருந்துவதற்கு முன்னரே, மதி மயங்கியவர் போல நடந்து கொண்டார். தேங்காயை உடைத்து வைத்து, பழத்தில் ஊதுபத்தி ஏற்றி வைத்து, மதுபாட்டிலை தொட்டுக் கும்பிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரிலும், மது பாட்டில்களை வாங்கி, பூஜை செய்வதுபோல தொட்டுக் கும்பிட்ட நபர்கள், குடிக்கு அடிமையானவர்களாக இருக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

மதுரை ஐயர் பங்களா பகுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இரண்டு பேர் தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அளவுக்கதிகமான போதையில் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டதால் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் ஒழுகியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments