"ஆபாச" யூடியூபருக்கு ஆப்பு..! களத்தில் இறங்கும் காவல்துறை

0 9823

ன்லைன் விளையாட்டில் தனது முகத்தைக் காட்டாமல் காது கூசும் அளவுக்கு ஆபாசமாகப் பேசி சிறுமிகள், இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் யூடியூபரான மதன் என்பவன் மீது பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், அவனை நேரில் ஆஜராக சென்னை புளியந்தோப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

பப்ஜி தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே போன்ற விளையாட்டுகளை உருவாக்கி, அவற்றில் விளையாட இணையும் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் ஆபாச வார்த்தைகளால் உரையாடுவது இந்த மதன் என்ற நபரின் வழக்கம். இவனுடைய ஆபாசப் பேச்சுகளுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி இருப்பதுதான் வேதனை. விளையாட்டிற்கான கமெண்டை ஆபாசமாக கூறுவதால், சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்து சிறுவர் சிறுமியர் என இவனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தொடுகிறது.

"டாக்ஸிக் மதன் 18 பிளஸ்" எனும் யூ ட்யூப் சேனலில் யூ ட்யூபர் மதனின் இந்த ஆபாச அர்ச்சனைகள் கொட்டி கிடக்கின்றன. இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சிறுமிகள், இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசும் மதன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்து ஹாய் அனுப்பினால், இரவில் வீடியோ காலில் பேசலாம் எனக் கூறி தனது வலையில் வீழ்த்தும் பேச்சுகளும் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. இவன் ஆபாசமாக பேசுவதை யாரும் கேட்டால் அவர்களையும் காதுகூசும் ஆபாசமாக பேசி மிரட்டுவதும், எல்லா பெண்களும் இப்படியானவர்கள் தான் என பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வீடியோ பேச்சும் வைரலாகிறது.

யூடியூபர் மதனின் பேச்சுகள் எல்லை தாண்டிய நிலையில், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களிலும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை புளியந்தோப்பு மாவட்ட சைபர் கிரைமில் மதன் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சிறுவர், சிறுமியரின் மனநிலையை பாதிக்கும் மதனின் ஆபாச பேச்சு, வீடியோக்களை நீக்கவும், முடக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். யூட்யூபர் மதனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments