சென்னை போலீசாரின் அதிரடி வேட்டை..! ரவுடிகளுக்கு போடும் ஸ்கெட்ச்; தாதா காக்காதோப்பு பாலாஜியின் பின்னணி

0 6206

சென்னை மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரௌடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறான்.

ஒருகாலத்தில் மிகப்பெரும் 'டான்'கள் சாம்ராஜ்யம் அமைத்திருந்த பகுதி வட சென்னை. "கேட்" ராஜேந்திரன், நாகேந்திரன், டான் சேரா, வெள்ளை ரவி, பாக்ஸர் முரளி, கல்வெட்டு ரவி என வடசென்னை ரவுடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.... அந்த வகையில் இந்த காக்காதோப்பு பாலாஜி, 2001 -ம் ஆண்டில் புஷ்பா, 2007ல் ஏழு கிணறு பகுதியில் "தலித் பாலு", 2011-ஆம் ஆண்டு யானை கவுனி பகுதியில் "பில்லா சுரேஷ்" ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டான்.

வட சென்னையில் கொலை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தொடங்கிய பாலாஜி ஒரு கட்டத்தில் துறைமுகம் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. கண்டெய்னர் வருவதற்கும், செல்வதற்கும் மாமூல் என தொடங்கி சில தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் நட்பு மூலம் செம்மரக் கடத்தல் வரை பாலாஜியின் கை நீண்டதாகவும் கூறப்படுகின்றது.

வட சென்னைக்கு காக்காதோப்பு பாலாஜி போலவே தென் சென்னைக்கு சி.டி.மணி என்ற ரௌடி... தங்களுக்குள் எல்லைகளை பிரித்துக்கொண்ட இரு ரவுடிகளும் ஒருவருக்கொருவர் நேசக்கரம் நீட்டிக்கொண்டனர். இந்த நிலையில்தான், புதிதாக பொறுப்பேற்ற சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால், முதலில் தாதா சி.டி.மணியை கைது செய்தார். தற்போது அவனது கூட்டாளி காக்கா தோப்பு பாபாஜியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு விழுப்புரம் அருகே போலீசாரிடம் சிக்கிய காக்கா தோப்பு பாலாஜி, போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோது, சிடி மணியை போலவே கையையும் காலையும் முறித்துக் கொண்டான் என்று கூறப்படுகிறது. கைதான தாதாக்கள் இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக்கைதிகளுக்கான வார்டில் எலும்பு முறிவு சிகிச்சையில் உள்ளனர். இரண்டு பிரபல தாதாக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனி அடுத்தடுத்த ரவுடிகளுக்கும் காவல் துறை ஸ்கெட்ச் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments