சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

0 3041

பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், கடவுளின் அவதாரம் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் சிவசங்கர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பில் சுஷில் ஹரி இண்டர்நேசனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் விடுதியில், தங்கிப் பயிலும் மாணவியரிடம் சிவசங்கர் பாபா பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது நூற்றுக்கணக்கான புகார்கள் இணைய வழியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுக்கப்பட்டது.

சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், சிவசங்கர் பாபா உத்தரக்கண்ட் சென்றுள்ளதாகவும், நெஞ்சுவலி காரணமாக டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவியர் இருவரும், இப்போது படித்து வரும் மாணவி ஒருவரும் புகார் அளித்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலரைக் கடவுளின் அவதாரமான சிவசங்கர் பாபாவுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் எனக் கூறி ஆசிரிமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குக் கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவசங்கர் பாபா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போக்சோ, கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வளாகத்தில் தங்கி சிவசங்கர் பாபாவுக்குப் பணிவிடை செய்யும் பெண் ஊழியர்கள் சிலரும் இதற்கு உடந்தை என்பதாலும், நீண்ட காலமாக இதுபோன்று நடந்து வந்துள்ளது என்பதாலும் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. டேராடூனில் சிவசங்கர் பாபா இருப்பதாகக் கூறப்படுவதால் அங்குச் சென்று விசாரணை நடத்துவதற்காக மாநிலப் புலனாய்வு அமைப்பான சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்துக் காவல் துறைத் துணைத் தலைவர் சத்தியப்பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். சிவசங்கர் பாபா மீதான வழக்கில் மாமல்லபுரம் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் தொடக்கியுள்ளதாகச் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments