வறுமையிலும் பிரியாமல் ‘காதலுக்கு மரியாதை’ ஊரடங்கால் தவிப்பு..! 10 வருட வாழ்க்கை போராட்டம்

0 8259
வறுமையிலும் பிரியாமல் ‘காதலுக்கு மரியாதை’ ஊரடங்கால் தவிப்பு..! 10 வருட வாழ்க்கை போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண், இரண்டு கால்களும் செயலிழந்த தனது கணவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற 10 வருடமாக வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஊரடங்கால் வருமானம் முடங்கி வறுமையில் வாடுவதாக வேதனை தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர், எலக்ட்ரிசன் வேலை செய்து வந்த இவர் 2004 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பவானி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் , திருமணமான நான்கு வருடத்துக்கு பிறகு தனசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதனை செய்தபோது சக்கரை நோய் இருப்பதாக தெரிவித்தனர்.

பவானி கணவனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல இடங்களில் கடன்களை வாங்கி தனியார் மருத்துவமனையில் பல லட்சக் கணக்கில் செலவு செய்து கணவனை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதனால் சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பம் நாளடைவில் கஷ்டத்தை அனுபவிக்கத் தொடங்கியது, ஒரு பக்கம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைஇ மறுபக்கம் சர்க்கரை நோயால் படுத்த படுக்கையாக அவதிப்படும் கணவன் என்று எங்கும் செல்ல முடியாமல் தவித்துள்ளார்.

கணவனின் மருத்துவ செலவுக்காக மாதம் 8,000 ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற பவானி, வருமானத்திற்காக வீட்டிலேயே டியூஷன் நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து கணவருக்கான மருத்துவ செலவு மற்றும் வீட்டுச் செலவுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு இருவரையும் இரண்டு குழந்தைகளாக பாவித்து பராமரித்து வந்துள்ளார் பவானி.

கடந்த வருடம் ஊரங்கு போடப்பட்டதில் இருந்து எந்த ஒரு வருமானமும் இல்லை, கையில் பணம் இல்லாததால் பவானி வைத்திருந்த நகைகள் அனைத்தையும் விற்று மருத்துவ செலவுக்காவும் மற்றும் வீட்டுச் செலவுக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். கையில் வைத்திருந்த எல்லா பணமும் செலவாகி விட்டது. தற்போது மருத்துவ செலவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியாய் தவித்து நிற்பதாக கலங்கினார் பவானி

தனது கணவர் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்றி வாழ்வை மீட்டெடுக்க தமிழக அரசு ஒரு ஊன்று கோலாக இருந்து உதவ வேண்டும் என பவானி கோரிக்கை வைத்துள்ளார்.

காதலித்து கரம் பிடித்தாலும் , பெற்றோர் பார்த்து திருமண பந்தத்தில் இணைந்தாலும் கருத்துவேறுபாடு என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் சில அவசர புத்தியினருக்கு மத்தியில் , எமனிடம் போராடி கணவனின் உயிரை மீட்டுக் கொண்டு வர போராடும் நிகழ்கால சாவித்திரி இந்த பவானி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments