தேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..! லாரி ஓட்டுனரின் பரிதாபம்

0 28851

நாமக்கல்லில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு மும்பைக்கு சென்ற லாரி ஓட்டுனர் ஒருவர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்ததால், அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பலாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தியவசியம் மற்றும் விவசாய பொருட்களை மக்களிடம் சேர்க்க உயிரை பணயம் வைக்கும் லாரி ஓட்டுனர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

வீட்டில் இருந்து புறப்படுவது தான் தெரியும்..! திரும்பிவரும் நாட்கள் தெரியாது..! வெயிலோ.. மழையோ... போக்குவரத்து நெரிசலோ, ஊரடங்கோ எதுவென்றாலும் நாள் கணக்கில் பொறுமையாக காத்துக்கிடந்து, கொண்டு செல்லும் சரக்கை சேர்க்க வேண்டிய இடத்தில் பொறுப்பாக ஒப்படைத்து திரும்பும் தைரியசாலிகள் நம்ம லாரி ஓட்டுனர்கள்..!

இப்படி 40 வருடமாக லாரியை இயக்கிக் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுனர் தான் நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராமலு. 60 வயதான இவர் கடந்த மே மாதம் 8ஆம் தேதி நாமக்கல்லில் இருந்து மும்பைக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் கொரோனா இல்லை என்று சான்று பெற்று வந்தால் தான் மார்க்கெட்டிற்குள் லாரியை அனுமதிக்க முடியும் என்று கறாராக கூறியுள்ளனர். மேலும் லாரியுடன் காத்திருந்த ராமுலுவுக்கு கட்டயமாக கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

சோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்தப்பட்ட ராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், 10 நாட்களுக்கு மேல் எந்த ஒரு உடல் நலக்கோளாறும் இல்லாத நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட ராமுலுவுக்கு திடீரென்று சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத்திணறல் என அடுத்தடுத்த நாட்கள் கொரோனா தீவிரமடைந்த நிலையில் மொத்தமாக 24 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமுலு உயிரிழந்தார்.

ராமுலு சிகிச்சை பெற்று வந்த போது வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் அவரது நிலையை மருத்துவர்கள் படம் பிடித்து காட்டியுள்ளனர். மேலும் அவர் உயிரிழந்த பின்னரும் அவரது முகம் தெரியும் வகையில் கண்ணாடி கவர் கொண்டு பேக்கிங் செய்து அவரது சடலத்தை எடுத்துச்சென்று அங்குள்ள மயானத்தில் தகனம் செய்து அவரது சாம்பலை இறுதி சடங்கிற்காக ஒரு சொம்பில் அடைத்து அதனை துணியால் சுற்றி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தகவல் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை கடும் கவலையடைய செய்தது. லாரி ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் தங்களில் ஒருவர் பாதிப்புக்குள்ளாகி இறந்ததற்கு உதவ எண்ணி ராமுலுவின் குடும்பத்தினருக்கு 1000 ரூபாய் முதல் 5000 அயிரம் ரூபாய் வரை என மொத்தமாக ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்து உதவியுள்ளனர்.

இதற்கிடையே இராமலு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 24 நாட்களுமே அவர் பணிபுரிந்த மகாலட்சுமி டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தினரும் அங்கு பணிபுரியும் கலைவாணன் என்பவரும் தான் பார்த்துக் கொண்டதாகவும், மருத்துவமனையில் ஆன மருத்துவ செலவையும் அவர்களே ஏற்றுக் கொண்டதாகவும் அவருக்கு தங்கள் குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளதாகவும் இராமலுவின் மூத்த மகன் சிவா தெரிவிக்கின்றார்.

ராமுலு மட்டுமல்ல ஏராளமான லாரி ஓட்டுனர்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும், தங்களின் உயிரை பயணம் வைத்து விவசாய பொருட்களை ஏற்றிச்செல்வதற்கும், அங்கிருந்து அத்தியாவசிய மளிகை பொருட்களை தடையின்றி தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்தவகையில் வெளி மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் லாரி ஓட்டுனர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும் என்று தென்மண்டல லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments