கோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு போலீஸ் அட்வைஸ்..! கட்டிப்பிடித்து மனைவி உருக்கம்

0 5888
கோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு போலீஸ் அட்வைஸ்..! கட்டிப்பிடித்து மனைவி உருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியில் பேய் ஓட்ட சென்ற பெண்ணை சங்கிலியில் கட்டி வைத்து சித்ரவதை செய்த போலி சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு அந்த பெண்ணை மீட்டு ராணுவ வீரரான கணவருக்கு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்.... இவர் தனது வீட்டருகே அய்யா கோயில் கிளை ஒன்றை அமைத்து அருள்வாக்கு சொல்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியில் கட்டி போட்டு பிரம்பால் அடிப்பது, பேய் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வியாழக்கிழமை அந்த கோயிலில் இளம் பெண் ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது

தகவல் அறிந்த குளச்சல் டி.எஸ்.பி கணேசன் போலீசாருடன் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய போது, அங்கு ஒரு இளம் பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டு அந்த கோயில் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் சேவிளை பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான வினோ என்பவரின் மனைவி அஜிதா என்பதும், எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரி பெண்ணான இவருக்கு கடந்த 15-நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கணவர் வினோ மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் பேய் பிடித்திருக்கலாம் என எண்ணி அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போலி சாமியார் துரைராஜ் வீட்டில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்த போலி சாமியார் அவர்களை குடும்பத்தோடு கோயிலில் தங்க வைத்து அந்த பெண்ணை சங்கிலியில் கட்டிப்போட்டு பேய் ஓட்டுவதாக கூறியும், அருள் வந்திருப்பதாக கூறியும், தினமும் பிரம்பால் அடித்து சித்திரவதை செய்ததும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அப்போது, மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்டது போல உங்களை கட்டிபோடலாமா? என்று கேள்வி எழுப்பி ராணுவ வீரரை போலீசார் எச்சரித்தனர்.

ஒரு கட்டத்தில் காவல்துறையினர் ராணுவவீரரை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முயன்றபோது அருகில் நின்றிருந்த அவரது மனைவி குழந்தைத்தனமாக அவரை கட்டிப்பிடித்து, அவரை மட்டும் விட்டு விடுங்கள் என போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து பெண்ணின் கணவரான ராணுவ வீரர் வினோவை எச்சரித்து படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போலி சாமியார் துரைராஜ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏற்கனவே இந்த போலி சாமியார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக கூறும் போலீசார், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நவீன மருத்துவ முறைகளும் மருத்துவர்களும் உள்ள நிலையிலும் ஒருசிலர் மனபிறழ்வை, பேய் பிடித்திருப்பதாக கூறி பேய் ஓட்டுவதற்காக இதுபோன்ற போலி சாமியார்களிடம் சிக்கி பணத்தை இழந்து, உடல் நலம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களை அணுகுவதால் சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

அதே நேரத்தில், ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டால், அவரை ஒதுக்கிவிடாமல், அவர்களையும் பேரன்போடு அரவணைத்தால் இயல்பு நிலைக்கு திருப்ப அந்த அன்பே மருந்தாகி உதவும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments