பாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்சி பிரமுகர்..! அத்துமீறல் ஆசிரியருக்கு ஆதரவு

0 3955

சென்னை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞரை மிரட்டியதாக அரசியல் கட்சி பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் உடற்கற்வி ஆசிரியரான எபிதாஸ் என்பவர் அங்கு படித்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தொடர்ச்சியாக விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துப்பூர்வ புகார் அளித்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த, அப்போதைய பள்ளியின் முதல்வர் பிரான்ஸிஸ் என்பவர், எபிதாசிடம் மன்னிப்புக்கடிதம் பெற்று அவர் மீது நடவடிக்கை எடுப்பது போல 15 நாட்கள் மட்டும் பணி இடை நீக்கம் செய்து மீண்டும் அதே பணியில் தொடர அனுமதித்துள்ளார். புகார் அளித்த மாணவியை வேறு பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் ஆசிரியர் எபிதாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாலியல் புகாரை மறைத்ததோடு தற்போது பள்ளியின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் முன்னாள் முதல்வர் பிரான்ஸிஸ் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அளித்த புகாருக்கு, கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவி அளித்த இந்த பாலியல் புகாரை விசாரிக்க இயலாது என்று பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ஸ்ரீதருக்கு கடிதம் அனுப்பியது தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம். இந்நிலையில், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை விரைந்து விசாரிக்கும் நிலை ஏற்பட்டதால், புனித ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் எபிதாசுக்கு எதிரான புகாரை மீண்டும் கையில் எடுத்துள்ளது ஆணையம். ஆனால் காவல்துறையினர் இதுவரை இந்த புகாரை விசாரிப்பதில் வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு எப்படி டென்னிஸ் விளையாடுவது என்று ஆசிரியர் எபிதாஸ் கையை பிடித்து சொல்லிக் கொடுக்கும் போது கைபட்டுவிட்டது என்று ஆசிரியருக்காக ஆதரவு கரம் நீட்டியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி பிரமுகர் தமிழ்கதிர் என்பவர், ஆசிரியர் எபிதாஸ் தனக்கு வேண்டப்பட்டவர் என்றும், அதனால் அவருக்கு எதிராக போலீஸில் அளித்துள்ள பாலியல் புகாரை வாபஸ் வாங்குமாறும், வழக்கறிஞர் ஸ்ரீதருக்கு போன் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மாணவியிடம் அத்துமீறிய புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக பேசிய அரசியல் பிரமுகர் மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments