பள்ளிக்கூடம் சென்ற மாமன் மகளுடன் டும் டும்.. போக்சோவில் சிக்கிய போலீஸ்..! வருத்தபடாத வாலிபர் சங்கம் ஆக்ஷன்

0 7997

மதுரை அருகே பள்ளி செல்லும் வயதில் காதலில் விழுந்த முறைப்பெண்ணை குடும்பத்தினரின் கவுரவத்திற்காக, திருமணம் செய்ததாக சென்னை காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27 வயதான இவர் 2016ஆம் ஆண்டு காவல்துரையில் பணியில் சேர்ந்தார். ஆயுதப் படையில் இருந்து மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த பழனிக்குமார். தற்போது குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு வாகன ஓட்டியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் பழனிக்குமார், கடந்த மாதம் 17ஆம் தேதி சமயநல்லூர் அருகில் 17 வயதான தனது உறவுக்கார சிறுமியை பெற்றோர் விருப்பபடி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புது மனைவியுடன் சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், குழந்தைகள் நல அமைப்புக்கு பழனிக்குமார் சிறுமியை கட்டாய திருமணம் செய்து வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி இதுதொடர்பாக மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கண்ணகி காவலர் பழனிக்குமாரை அழைத்து விசாரித்த போது குடும்ப கவுரவத்துக்காக அவசர அவசரமாக நடத்தப்பட்ட குழந்தை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.

பழனிகுமாரின் மாமன் மகள் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில் காதலில் விழுந்துள்ளார். அவர் காதலனை திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரம் பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அந்த சிறுமியை பழனிகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். காவலரான பழனிக்குமாருக்கு இது தவறு என்று தெரிந்தாலும் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் தனது மாமன் மகளான சிறுமியை திருமணம் செய்து கொண்டு சென்னை அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

17 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக காவலராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, பழனிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவலர் பழனிக்குமார் மனைவியின் அழைப்பின் பேரிலேயே, வருத்தப்படாத வாலிபராக சுற்றும் அவரது காதலன் குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments