ஆற்றில் மீன்பிடிக்கப் போய்.... சேற்றில் மயங்கிய போதை ஆசாமி..!

0 2950

புதுச்சேரியில் சேறும் சகதியுமாகக் கிடந்த ஆற்றில் முழு போதையில் இறங்கி மீன்பிடிக்க முயன்ற இளைஞர் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக எண்ணி போலீசார் தூக்க முயன்றபோது உயிரோடு எழுந்து வந்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ளது அரிக்கன்மேடு ஆறு. முகத்துவாரப் பகுதி என்பதால் கடல் மட்டம் உயரும்போதும் மழைப் பொழிவின்போதும் மட்டுமே ஆற்றில் தண்ணீர் காணப்படும். தற்போது மழையும் இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இன்றி சேறும் சகதியுமாக உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை மதியம் இளைஞர் ஒருவர் மல்லாக்கப் படுத்தவாறு அசைவின்றிக் கிடந்துள்ளார். அருகிலுள்ள மேம்பாலத்தில் இருந்து பார்த்தவர்கள், அவர் இறந்துகிடப்பதாக எண்ணி, போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், இளைஞர்கள் இருவரை அனுப்பி, அருகில் சென்று பார்க்குமாறு கூறினர்.

இருவரும் அருகில் சென்று பார்த்தபோது மல்லாக்கப் படுத்திருந்த இளைஞரின் வயிறு ஏறி இறங்கியவாறு இருந்திருக்கிறது. பிறகுதான் அவர் உயிரோடு இருப்பது தெரியவந்தது. போதையில் அவர் மயங்கிக் கிடப்பதை உணர்ந்து கொண்ட இளைஞர்கள், தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பினர். தூங்கியவனை எழுப்பியது போல் சில நொடிகள் ரியாக்ஷன் கொடுத்த போதை இளைஞன், மீண்டும் சயனகோலத்துக்குச் சென்றான். வேறு வழியின்றி இளைஞனை தரதரவென இருவரும் பிடித்து இழுத்து வந்தனர்.

ஒரு வழியாக இளைஞனை காவல் நிலையம் அழைத்துச் சென்று தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டிய பின் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவன் பெயர் சக்திவேல் என்பதும் வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றதாகவும் போதையில் இருந்ததால் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூலாகச் சொன்ன இளைஞனை கடுப்போடு பார்த்தனர் காவலர்கள். பிறகு அவனுக்கு அறிவுரைகள் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments