டெல்டாவில் தூர்வாரும் பணிகள்..! முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

0 3045

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும்  பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த வழக்கப்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீரை திறந்து வைக்கிறார். அவ்வாறு திறக்கப்படும் நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவற்றை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர், பின்னர் கல்லணையில் மணல் தூர்வாரும் பணிகள், கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு அணை ஷட்டர்கள் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆய்வு மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு தூர்வாரும் பணிகள் புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.

பின்னர் கல்லணை பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தூர் வாரும் பணிகள் குறித்து வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பாசனத்திற்கு பயன்படும் வல்லம் முதலை முத்துவாரி வடிகால் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.

திருச்சி புலிவலம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணிகள், மற்றும் புதிய மணற்போக்கி சீரமைப்பு பணியையும் நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை 589 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தடையில்லாமல் பாசன வசதி பெறும் வகையில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்தும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments