தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை?

0 16501

மிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் ஒரு வாரத்துக்குத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அதன்பின் தளர்வில்லா ஊரடங்கு என நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததைவிடப் பாதியாகக் குறைந்துள்ளது. இதையடுத்துக் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், மின்பொருட்கள் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள் திறந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு ஜூன் 14 காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த மாவட்டங்களில் கோவில்களில் வழிபாட்டுக்கு அனுமதிப்பது, தேநீர்க் கடை, துணிக்கடை, நகைக்கடை, முடித் திருத்தகம், காலணிக் கடை, மதுக்கடை ஆகியவற்றைத் திறக்க அனுமதிப்பது ஆகிய தளர்வுகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சதுர அடி பரப்புக்குட்பட்ட பெரிய கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் இப்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும், கூடுதல் தளர்வுகள் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments