மேட்டூர் அணையில் இருந்து நாளைமறுநாள் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1793

திருச்சி மாவட்டம் கல்லணையில் நாளை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை மறுநாள் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இருந்து நாளை காலை திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், கல்லணையைப் பார்வையிடுவதுடன் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மதகு சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 12ம் தேதி மேட்டூர் அணைக்குச் செல்லும் முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். காலை 10.30 மணியளவில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடுகிறார்.

இதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க 5, 8,16 என 29 கதவுகள் உள்ளன. இதில் பருவ மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

இதனிடையே, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்திரம் மூலம் நெல் நாற்றுக்களை நடுவதற்கு ஏதுவாக இப்போதே பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments