குடிகார அந்நியன் அட்ராசிட்டிஸ் போலீஸ் மண்டைய உடைப்பாராம்..! மாஸ்க் இல்லாமல் மல்லுகட்டு..!

0 2906

நாகப்பட்டினத்தில் மாஸ்க் இல்லாமல் குடிபோதையில் இரு சக்கரவாகனம் ஓட்டிச் சென்றவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி, சாலையோரம் அமர்ந்து காவல்துறையினரை ஆபாசமாக வசை பாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருந்தாலும், ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் மக்களின் அசவுகரியங்களை தவிர்க்க சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை உறவினர்கள் சென்று பார்த்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில முன்கோபிகள் காவல்துறையினருடன் மல்லுக்கட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் நாகப்பட்டினம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே வருவாய் அதிகாரிகளுடன் வாகன சோதனை நடத்திய வெளிப்பளையம் போலீசார், விதியை மீறி ஊர்சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது முககவசம் இல்லாமல் இரு சக்கரவாகனத்தில் வந்த அன்னியன் அம்பி ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மச்சானை பார்ப்பதற்கு செல்வதாக கூறினார். போதையில் மாஸ்க் அணியாமல் இருந்த அவரது இரு சக்கரவாகனத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்தனர்.

அபராதத்தை செலுத்த மறுத்து அடம் பிடித்த அந்த போதை ஆசாமி, சாலையோரம் தரையில் அமர்ந்து தனது இருச்சக்கரவாகனத்தை கேட்டு வம்பு செய்ய ஆரம்பித்தார்.

தன்னை செய்தியாளர்கள் படம்பிடிப்பதை அறிந்த அந்த குடிகார அன்னியன், போலீஸ்காரர் தன்னை ஆபாசமாக பேசிவிட்டதாக கூறி சம்பவத்தை திசைதிருப்பினார். மேலும் அவரை மாஸ்க் அணியாமல் சென்று வர அனுமதித்தால் அவர் மீண்டும் வரும் போது அபராதம் செலுத்துவதாக கூறியும் போலீஸ் கேட்கவில்லை என்று ஆபாசமாக வசைபாடினார்.

அருகில் நின்ற போலீஸ்காரரை பார்த்து இவர் அடிப்பார்ன்னு என்றெல்லாம் பயப்படமாட்டேன், ஏன் டிப்பார்ட்டுமெண்டுக்கே பயப்படுறது இல்லை ,என்ற அவர் தன் பெயர் செல்லமுத்து என்றும் தான், தனது தகப்பனுக்கு பிறந்த பிள்ளை என்பதால் என்ன வேணாலும் செய்வேன், பாக்குரியா பாக்குரியா ? என்று பஞ்ச் அடித்து போலீசுக்கு சவால் விட்டார்.

அன்னியன் அலப்பறை தொடர்ந்ததால் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசாரை வரவழைக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் அடங்காமல் காவலரை ஒருமையில் அழைத்ததோடு அவரது குடுப்பத்தாரையும், தாயையும் பற்றி அறுவெறுக்கதக்க வகையில் ஆபாசமாக பேசினான். அப்போதும் அந்த காவலர் அமைதியாகவே நின்றிருந்தார்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் ஏட்டு தலைமையில் மேலும் 4 காவலர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் எழுந்திருக்க மறுத்ததோடு, அந்த போலீஸ் காரரை மீண்டும் வரைமுறை இல்லாமல் பேசினான்.

மயிலே மயிலே என்று கெஞ்சினால் கதைக்கு ஆகாது என்று போலீசார் சுற்றிவளைத்து நிற்க செய்தியாளர்களின் காமிரா ஆப் ஆனதும், அந்த அரைபோதை அன்னியனை அலேக்காக தூக்கி காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார் , சிறப்பு கவனிப்புடன் புத்திமதி சொன்னதால் மீண்டும் அம்பியாக மாறிய அன்னியன் செல்லமுத்து மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த பெருந்தொற்று காலத்தில் நமக்காக வீதியில் இறங்கி பணி செய்யும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதே நேரத்தில் மாஸ்க் அணியாததற்கு 200 ரூபாய் கொடுக்க மறுத்து, அடம்பிடித்ததோடு போலீசாரிடம் வம்பு பேசி சிறை கம்பிகளுக்குள் வகையாக சிக்கினான் இந்த குடிகாரவம்பன்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments