தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தொடரும் தட்டுப்பாடு

0 2450

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

மதுரையில் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 2 நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போடுவதற்காக முகாம்களுக்கு வந்த மக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையில், 4-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் மையங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

 திருப்பூர் மாவட்டத்தில் போதிய அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பெரும்பாலான முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களாக சில இடங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 கோவை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 3-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி 3-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி முகாம்களில் கொரோனா பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தேனி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் முகாம்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இதுவரையில் ஒருலட்சத்து 25ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து இல்லாததால் 5-வது நாளாக பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து41ஆயிரத்து055 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், போதிய அளவு கையிருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் மூன்றாவது நாளாக தடுப்பூசிகள் போடும் பணிகள் நிறுத்தபட்டுள்ளது

 சேலம் மாவட்டத்திலுள்ள 130-க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடும் பணி 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மையங்களுக்கு ஆர்வமுடன் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments