மும்பையில் தொடங்கியது பருவமழை... சாலைகளில் வெள்ளப் பெருக்கு..!

0 2170

தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிர மாநிலத்தை அடைந்துள்ள நிலையில் மும்பையில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது.  

தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரத்துக்கு முன்னேறியுள்ளதால் மும்பையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் பத்தாம் நாள் பருவமழை தொடங்கும் என்றும், இந்த ஆண்டு ஒருநாள் முன்கூட்டித் தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 8 சென்டிமீட்டரும், சாந்தாகுரூசில் 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பிரீச்கேண்டி மருத்துவமனை அருகே மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. முழங்காலளவு நீரில் வாகனங்கள் சென்றன. மாதுங்கா கிங்ஸ் சர்க்கிள் என்னுமிடத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

தாதர், தாராவி, சயான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

நேற்றிரவு முதல் இடைவிடாமல் மழை பெய்வதால் சயான், குருதேஜ்பகதூர் நகர் இடையே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குர்லா, மும்பை சிஎஸ்டி இடையே மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கனமழை பெய்வதாலும், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதாலும் செம்பூரில் மும்பை - புனே கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை அந்தேரியில் வெள்ளப்பெருக்கால் ரயில் பாதைக்குக் கீழே உள்ள சுரங்கப்பாதை மூழ்கியது. இதனால் அந்த வழியில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாய்ந்தோடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள்ளும் புகுந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments