மாநில அரசுகளுக்கு விநியோகிக்க 74 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது மத்திய அரசு

0 3000

மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத டோஸ்களை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். 25 சதவீதத் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் 21ந் தேதி முதல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து புதிதாக 44 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதவிர, தற்போது பரிசோதனை நிலையில் இருக்கும் பயலாஜிக்கல்-இ தடுப்பூசிகளை 30 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 53 கோடி தடுப்பூசிகள் அரசிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு இறுதிக்குள் மொத்தம் 127 கோடி தடுப்பூசிகள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 18 வயது பூர்த்தியான அனைவருமே இனி இலவசமாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

 இதனிடையே தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கோவிஷீல்ட் 780 ரூபாய்க்கும் கோவாக்சின் ஆயிரத்து 410 ரூபாய்க்கும் ஸ்புட்னிக் வி ஆயிரத்து 145 ரூபாய்க்கும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் சேவை கட்டணமாக ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 150 ரூபாய் கட்டணம் பெறலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் கூடுதலான கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments