கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை.. நவீன தகவல் உதவி மையம் அமைப்பு..!

0 2244

கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் அவர்களது உறவினர்கள் மூலம் சமூகத்தில் தொற்று பரவுவதை தடுக்க, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நவீன தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உடல் நிலையைப் பொறுத்து சாதாரண வார்டு, ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட வார்டு, ஐசியு என தனித்தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளை உடனிருந்து பார்த்துக்கொள்ளும் உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கும், வெளியிலும் அவ்வபோது சென்று வருவதால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனை தடுக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வெளியில், உள்நோயாளிககளின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நவீன டிஜிட்டல் திரை" வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் அந்த டிஜிட்டல் திரையில் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.

தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம், சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு 100சதவீதம் நம்பகத்தகுந்த தகவல்கள் வழங்குவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினசரி காலை 8 மணி, மாலை 5 மணி என இரண்டு முறை இந்த திரையில் நோயாளிகளின் விவரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. மற்ற வார்டுகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலை பற்றி உறவினர்கள் வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளும் வகையில் தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7305657006 என்ற இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு நோயாளியின் பெயரை கூறினால் அந்த உறவினரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பதை மருத்துவரிடம் கேட்டு சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் கூறி விடுகின்றனர்.

இந்த புதிய தகவல் உதவி மையத்தால் ஒரு நோயாளியை பார்க்க நான்கைந்து உறவினர்கள் கொரோனா வார்டுக்குள் உள்ளே செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இயலும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments