”தடுப்பு மருந்துகளை அதிகம் வீணடித்தால் ஒதுக்கீடு குறைக்கப்படும்” -மத்திய அரசு எச்சரிக்கை

0 3273

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அவற்றை விநியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசே மீண்டும் முழுமையாக ஏற்பதாக பிரதமர் மோடி திங்கட்கிழமை அறிவித்தார்.

நாட்டில் தயாராகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்யும் என்றும், மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை திருத்தியமைத்துள்ள மத்திய அரசு, இரு வாரங்களில் புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை, நோய் தாக்கத்தின் சுமை, தடுப்பூசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தடுப்பு மருந்துகளை வீணடித்தால் மாநிலங்களுக்கான விநியோகம் குறைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளை வீணடிப்பது அதிகரித்தால், அதற்கேற்ப தடுப்பு மருந்துகளின் ஒதுக்கீடு குறைக்கப்படும் என மத்திய அரசு இதன் மூலம் எச்சரித்துள்ளது. அனைத்து வருவாய்ப் பிரிவினரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும், வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் தனியார் தடுப்பூசி முகாம்களை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியிருப்பதாகவும், மாநிலங்கள் வசம் 1,19,46,925 தடுப்பூசிகள் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments