தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

0 3334
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

சென்னையில் பல இடங்களில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு இன்னும் தமிழகத்துக்கு முழுமையாக வழங்கப்படாத நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பில் உள்ள 2ஆயிரம் டோஸ் தடுப்பூசியைக் கொண்டு 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக முகாம்களுக்கு தடுப்பூசி போட வந்து மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என்று பலகைகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

 தடுப்பூசி சுத்தமாக கையிருப்பு இல்லாததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதுரை முழுவதும் 3 லட்சத்து 73ஆயிரத்து 495 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

 கோவையில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனால், ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மொத்தமாக 124 இடங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கையிருப்பில் உள்ள 80 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதால் சில மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது. மற்ற தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு, தடுப்பூசி வந்தவுடன் போடப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சென்னையில் இருந்து சேலம் வந்த 16 ஆயிரத்து 500 டோஸ்களும் தீர்ந்துவிட்டன.

 நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 4-வது நாளாக தடுப்பூசி போடப்படவில்லை. இதுவரை, நெல்லையில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மேலும் 37 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் நாளை முதல் வரவுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக 16லட்சத்து74ஆயிரம் டோஸ்களும், 45 வயதிற்கு மேற்பட்டர்வகளுக்காக 21லட்சத்து13ஆயிரம் டோஸ்களும் வரவுள்ளது. முன்னதாக, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாயில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்த பின் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றதோடு, மூலப்பொருட்கள் மட்டும் கொடுத்தால் குன்னூரிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையம் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments