"ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி" -பிரதமர்

0 5529
"கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்" -பிரதமர் நரேந்திர மோடி

மாநிலங்களுக்கு இலவசமாக மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கும் என்றும், மாநில அரசுகள், தடுப்பூசி கொள்முதலுக்கு தனியாக செலவழிக்க தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளதாகவும், கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது என்றும் தெரிவித்தார். கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளதாக கூறினார்.

நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மூக்கு வழியாக சொட்டு மருந்தாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்று, மக்களுக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாகவும், மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதற்கும் பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளதாகவும், அதன்படி நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தனியாக கொள்முதல் செய்ய தேவையில்லை என்று அவர் கூறினார். எஞ்சிய 25 சதவீதம் தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தர். கொரோனா தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தீபாவளி பண்டிகை வரையில், ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெருந்தொற்று நீங்கிவிடவில்லை என்பதால், மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.

பிரதமரின் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில்  உற்பத்தியாகும் மொத்த தடுப்பூசிகளில் 75 சதவீத தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்ததை, மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று தடுப்பூசி கொள்கையை பிரதமர் மாற்றியமைத்ததற்காக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று ஏற்கனவே பலமுறை பிரதமர் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், தடுப்பூசி பதிவு மற்றும் நிர்வாக நடைமுறை மீதான முழுமையான கட்டுப்பாடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துளளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments