தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம்.. தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை..!

0 3607

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தட்டுப்பாடு நிலவுவதால் ஆர்வமுடன் தடுப்பூசி போட வந்து மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கடலூர்: தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் இருந்த 840 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கிராமங்களில் உள்ள இரண்டு மையங்களுக்கும் மற்றும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அறியாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மதுரை மாவட்டத்தில் குறைந்த அளவிலான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், சில மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், மற்ற மையங்களில் தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதுரை முழுவதும் 3 லட்சத்து 64ஆயிரத்து 128பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூடுதல் டோஸ்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் இருந்த ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மட்டுமே போடப்படுவதால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர். இதனால் தனிநபர் இடைவெளியை பின்பற்ற இயலாத சூழல் உருவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கையிருப்பில் உள்ள 500டோஸ்களும், இரண்டாவது தவணையாக தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால், அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மற்ற மையங்களில் தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments