ஊரடங்குக்கு அடங்காத இளைஞர்கள் "ஓடவிட்டு" தண்டித்த போலீசார்

0 5961

கடலூர் அருகே ஊரடங்கை கண்டுகொள்ளாமல் 2 இருசக்கர வாகனங்களில் 6 பேராக திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்தனர். ஓடவிட்டும் உடற்பயிற்சி செய்ய வைத்தும் இளைஞர்களை போலீசார் “பெண்டு” நிமிர்த்தினர். 

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. அத்தியாவசியத் தேவைகளின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் அவசியத் தேவைக்கு முறையாக அனுமதி பெற்றுச் செல்லலாம் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிமுறைகளின் முக்கியத்துவம் புரியாமலும் வெளியில் தேவையின்றி சுற்றினால் வரும் ஆபத்தை உணராமலும் சிலர் முன்னெடுக்கும் அலட்சியமான செயல்பாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பெரும் தடையாக அமைந்து வருகின்றன.

அந்த வகையில், கடலூர் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள், புதுச்சேரி பகுதியில் நடைபெற்ற நண்பனின் திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, இரண்டு இருசக்கர வாகனங்களில் 3 பேர் வீதமாக கடலூர் நோக்கித் திரும்பியுள்ளனர். சின்னக் கங்கணாகுப்பம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ரெட்டிச்சாவடி போலீசார், முகக்கவசம் கூட அணியாமல் வந்த இளைஞர்களை மடக்கி வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் உடற்பயிற்சி செய்யவைத்தனர்.

சுமார் அரை மணி நேர உடற்பயிற்சிக்குப் பிறகு போலீசார் நம்மை விடுவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு அடுத்து வந்தது ஓட்டப் பயிற்சி. அரை கிலோமீட்டர் தூரத்துக்கு இளைஞர்களை ஓடவிட்டனர் போலீசார்.

மூச்சிரைக்க சில ரவுண்டுகளை ஓடி முடித்த இளைஞர்களுக்கு அடுத்து காத்திருந்தது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி. இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர்களில் சிலர் பேந்த பேந்த விழிக்க, சில இளைஞர்கள் மட்டும் தட்டுத் தடுமாறி தெரிந்த திருக்குறளை ஒப்புவித்தனர்.

ஒருவழியாக எல்லாம் முடிந்த நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது வடிவேல் கணக்காக உள்ளே புகுந்த வெள்ளை வேட்டி நபர் ஒருவர், உதவி ஆய்வாளரை பேச விடாமல் அட்வைஸ் மழையை பொழியத் தொடங்கினார். ஏற்கனவே களைப்படைந்திருந்த இளைஞர்கள், ஆவேசமாகப் பேசிய அந்த நபரை திகிலுடனேயே பார்த்தனர்.

அவரது பேச்சுகளுக்கு இடையே காவல் உதவி ஆய்வாளர் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்க, அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பக்கவாத்தியம் வாசித்தார் அந்த வெள்ளை வேட்டி ஆசாமி.

ஒரு கட்டத்தில் கடுப்பான உதவி ஆய்வாளர் வெள்ளை வேட்டி ஆசாமியை ஒரு அதட்டு அதட்டி அடக்கினார். அதன் பின்னர் வெள்ளை வேட்டி ஆசாமி சைலண்ட்டாக, இனி இதுபோல் வெளியில் சுற்றக்கூடாது என இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments