தமிழகத்தில் பரவலாக நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு... ஊசி போடும் பணிகளில் தொய்வு.!

0 3310

மிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஊசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 36 பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 88 சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 36 பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கையிருப்புக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. மாவட்ட நிர்வாகத்திடம் தற்போது 5000 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட மையங்கள் தவிர்த்து மற்ற மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்திற்கு என்று 1000 டோஸ்கள் கோவாக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 5 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் 200 டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக் கணக்கானோர் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் காத்திருந்தனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

மதுரை மாவட்டத்தில் முன்பதிவு செய்திருந்த நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போது 2000 கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நபர்களுக்கு மட்டும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியின் கையிருப்பும் குறைந்து வருவதால், நாளை ஒருநாள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பில் இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாவட்ட மக்கள் தொகை அடிப்படையில், 11 விழுக்காடு ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரையில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்ததையடுத்து 28 ஆரம்ப சுகாதார நிலைங்கள், நான்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐந்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், போதிய கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் நிலவுகிறது. அரியமங்கலம் கோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் இருப்பில் இருந்த ஆயிரத்து 500 தடுப்பூசிகளும் காலையிலேயே தீர்ந்துவிட்டதால், அங்கு காத்திருந்த மக்கள் திரும்பிச் சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினரிடம் தற்போது கோவாக்சீன் மற்றும் கோவிசீல்டு இரண்டு தடுப்பூசிகளும் கையிருப்பு இல்லை என்பதால், 2வது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக ஒரு லட்சத்தி 26 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று முன் தினம் 16 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததாகவும் ஆனால் இன்று காலை தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்புகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு பொது மருத்துவமனை மற்றும் 40 சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் திங்கட்கிழமை காலை தடுப்பூசிகள் வரும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகள் வந்தவுடன் கையிருப்புக்கு ஏற்ப அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் என்றும் அவர்கள் கூறினர். 

சென்னை கோடம்பாக்கம் தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலையிலிருந்தே ஏராளமானோர் காத்திருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக 80 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்ட 40 பேருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட 40 பேருக்கும் அதுவும் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் காலையில் இருந்தே அங்கு கூட்டத்தைக் காண முடிந்தது. 

நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுபாடுகாரணமாக 2 வது நாளாக கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடபட்டிருந்தன. மாவட்டத்தில் 84 மையங்களில் தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்று வந்தது. மாவட்டத்தில் நாளொன்றிற்கு 5000 பேர் என இலக்கு வைத்து இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments