சுற்றுச்சூழல் காக்க.. உறுதி ஏற்போம்..! இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

0 2152

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்..

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல... அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பாடும் பறவைகள், பச்சை பசேலென்ற சோலைக் காடுகள், துள்ளிக்குதித்து ஓடிடும் வன உயிரினங்கள், பாய்ந்து விழும் அருவி, சலசலக்கும் நீரோடைகள், பனி உறங்கும் புல்வெளி இவையனைத்தும் இயற்கை நமக்குக் கொடுத்த வரம்

கடந்த தலைமுறை நமக்கு கொடுத்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு பத்திரமாகக் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால், நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து எரிதணலாய் மாறிக் கொண்டிருக்கிறது பூமி. பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தியதால் மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கத் திணறி வருகின்றன.

மரங்களின் எண்ணிக்கை குறைவதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக உணர்ந்து வருகிறோம். ''சுவாசிக்கும் சுத்தக்காற்று நுரையீரலின் தரைதொட வேண்டும்" என்ற கவிஞன் கனவு, கனவாகவே போய்க் கொண்டிருக்கிறது.

மனிதர்களின் சுயநலத்தால் மரங்கள் வெட்டப்பட்டதால், பறவைகளின் கதறலையும், வனங்களை இழந்த விலங்குகளின் ஓலத்தையும் கவனிக்க முடியவில்லை. புவி வெப்பமயமாதலால் பனிப்பிரதேசங்களில் உருகிவிழும் பனியால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மூழ்கும் தீவுகள் ஒருபுறம் என்றால், இயற்கைச் சீற்றத்தால் பாதிப்புகள் மறுபுறம்.

இது ஒருபுறம் இருக்க பூமிப்பந்தில் இருக்கும் நீரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான நீரே குடிப்பதற்கு உகந்தது என்ற தகவல் மேலும் அதிர்ச்சியளிக்கிறது. நீராதாரங்களை பாதுகாக்காமல் விட்டதாலும், இருக்கும் ஆறு, ஏரி, குளம், குட்டைகளை அழித்ததாலும் குடிநீருக்கு அலையவேண்டிய நிலை உள்ளது

நாம் வாழும் வரை இந்த பூமியை காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இயன்றதைச் செய்வோம், இழந்த சுற்றுச்சூழலை மீட்போம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments