வாட்ஸ் அப்பில் குறைய சொன்னா வீட்டுக்கு வந்து மிரட்டறாங்க..! கண்ணீரில் தவிக்கும் பெண்

0 6069
வாட்ஸ் அப்பில் குறைய சொன்னா வீட்டுக்கு வந்து மிரட்டறாங்க..! கண்ணீரில் தவிக்கும் பெண்

ஓட்டுக் கேட்டு வந்தாங்க.. இப்ப ஒருத்தரையும் காணோங்க... என்று வாட்ஸ் அப்பில் ஒரு சிலர் குறையை ஒட்டு மொத்த ஊராரின் குறையாக மிகைப்படுத்திச் சொல்லி உதவிகேட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் மிரட்டியதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளபோவதாக அந்த பெண் வீடியோ வெளியிட்டு கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

தங்கள் பகுதி பிரச்சனைகளை வாட்ஸ் அப்பில் பேசி வைரலாக்கி அதற்கு தீர்வு காண்பது இப்போது பிரபலமாகி வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டதால் வம்பில் சிக்கி தவித்து வருகின்றார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண் ஒருவர்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த நரிப்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த சுபலா என்பவர் இரு தினங்களுக்கு முன்பு 50 குடும்பங்கள் கொண்ட தங்கள் கிராமத்தில் அத்தனை பேரும் அன்றாடம் காய்ச்சி என்றும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தங்கள் கிராமத்திற்கு சாலை மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதாகவும் அதுவும் அதிகாரிமார்கள் வந்து செல்லும் வசதிக்காக என்று கூறிய அந்த பெண், தங்களுக்கு ரேசன் கார்டுகள் இல்லையென்றும் விண்ணப்பித்து 6 மாதமாகியும் கிடைக்கவில்லை, மளிகை பொருட்கள் வாங்க கூட ஊரை விட்டு வெளியே செல்லகூடாது என்று மறித்துப் போட்டிருக்கின்றனர் . ஓட்டுக்கேட்டு வந்தவங்க கூட உதவிக்கு வரவில்லை என்று தங்களின் ஆதங்கத்தை கொட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை வாட்ஸ் அப்பில் பதிவிட அந்த வீடியோ தமிழகம் முழுவதும் வைரலானது

இந்த நிலையில் அந்த பெண்ணின் முகவரியை தேடி அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் வரிசைக்கட்டிச்செல்ல உதவி செய்ய வந்திருப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்த சுபலாவை ஆளுக்கு ஒரு பாணியில் கடுமையாக மிரட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் மிரண்டு போன சுபலா தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி 2 வதாக வீடியோ ஒன்றை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார்

மக்களுக்கு உதவும் இடத்தில் உள்ள அரசு அதிகாரிகளையோ, அரசியல் பிரமுகர்களையோ நேரில் சந்திக்க வாய்ப்பில்லாத ஊடரங்கு காலத்தில் தாங்கள் வெளியிடும் வீடியோ மூலமாவது உதவி வந்து சேராதா என்ற ஏக்கத்தில் தான் சுபலா அந்த வீடியோவை வெளியிட்டதாகவும், உதவி செய்ய மனமில்லை என்றால் சும்மாவாவது இருந்து விடலாம், வீடுதேடிச்சென்று மிரட்டுவது என்னமாதிரியான மன நிலை என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக விசாரித்த போது சுபலா தன்னை போல ஒரு சிலரின் பிரச்சனையை, ஊரில் உள்ள மொத்த பேரும் பிரச்சனையுடன் இருப்பது போன்று மிகைப்படுத்தி வீடியோவில் கூறியதால் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சத்தம் போட்டுள்ளனர். அதனால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகின்றது. சொந்த பிரச்சனையை ஊருக்கே பிரச்சனை போல மிகைப்படுத்தி பேசி வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments